ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி, உலகக்கோப்பை ஹாக்கியில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இன்று நடக்கும் நிலையில், 48 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1971 ஆம் ஆண்டு முதல் முதலாக நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணி, 1973 ஆம் ஆண்டு அடுத்த பதிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றது. 1975ல் அஜித் பால் சிங் தலைமை தாங்கி பட்டத்தை வென்றார். ஆனால் அதன்பின் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேற முடியவில்லை.
1978 முதல் 2014 வரை இந்தியாவால் குரூப் ஸ்டேஜைத் தாண்ட முடியவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள இந்திய அணி, ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான திறமையான வீரர்களுடன், பதக்கப் போட்டியாளர்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள இந்தியா, உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை சமீபத்தில் 1-4 என்ற கணக்கில் இழந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நடப்பதாலும், தற்போதுள்ள இந்திய அணி வலுவான அணிகளில் ஒன்றாக இருப்பதாலும், இந்திய அணி மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.