ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி கோப்பையினை மாவட்டங்கள் தோறும் கொண்டு செல்லும் பாஸ் தி பால் பேருந்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிய மற்றும் இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,
சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற போது நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். அப்போது சென்னையிலும் சிறந்த ஹாக்கி மைதானம் உள்ளது. சென்னையில் சர்வதேச போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆஸ்கார் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள பொம்மன்-க்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் லோகோவில் பொம்மனுடன் யானை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களும் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவோம். முதலமைச்சர் கோப்பைக்காண மாநில விளையாட்டுப் போட்டியில் முறைகேடு நடக்கவில்லை சிலம்பம் போட்டியில் பங்கேற்ற ஒரு வீரர் மட்டும் குற்றச்சாட்டை முன் வைத்தார். விசாரித்த போது குற்றச்சாட்டு உண்மை இல்லை. அந்த வீரர் தோல்வியின் காரணமாக குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தெரியவந்தது. முதலமைச்சர் கோப்பை போட்டியில் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.