இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற திலீப் டிர்கி, இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஹாக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஹாக்கி தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து திலீப் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஹாக்கி இந்தியா தேர்தல்கள் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவிருந்தன, ஆனால் மற்றவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் டிர்கி ஒருமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை வழிநடத்திய 44 வயதான திலீப் டிர்கி , 1996, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளார். மேலும் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை வென்ற அணிகளில் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
இதற்கிடையில், போலாநாத் சிங் ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேகர் ஜே மனோகரன் ஹாக்கி இந்தியாவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.