வேற லெவல் டீம்.. காமன்வெல்த்தை கலக்கப்போகும் இந்திய ஹாக்கி அணி!!

எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை ஹாக்கி இந்தியா சம்மேளனம் நேற்று அறிவித்தது. மன்பிரீத் சிங் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். மேலும் அவருக்கு துணை கேப்டனாக டிராக்-ஃப்ளிக்கர் ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிஆர் ஸ்ரீஜேஷ் முழு பலம் கொண்ட 18 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், எப்ஐஎச் ப்ரோ லீக்கின் ஒரு பகுதியாக இருந்த கோல்கீப்பர் சூரஜ் கர்கேரா மற்றும் முன்கள வீரர்களான ஷிலானந்த் லக்ரா மற்றும் சுக்ஜீத் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தப்பட்டதால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு இரண்டாவது வரிசை அணியை அனுப்ப ஹாக்கி இந்தியா முதலில் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆசிய போட்டியை நடத்தும் நாடான சீனாவில் கொரோனா கணக்கில் அடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா காரணமாக அந்நாடு போட்டியை ரத்து செய்துவிட்டது. இதனால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வலிமையான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த்தில் இந்திய அணி இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகிய நாடுகளுடன் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இரண்டு முறை முன்னாள் வெள்ளிப் பதக்கம் வென்ற கானாவுக்கு எதிராக ஜூலை 31 அன்று இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. கோல்ட் கோஸ்டில் 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி நான்காவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மன்பிரீத் கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியை வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் 2022க்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
கோல்கீப்பர்கள்: பிஆர் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக்
டிஃபெண்டர்கள்: வருண் குமார், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், ஜர்மன்பிரீத் சிங்.
மிட்பீல்டர்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட ஷர்மா
ஃபார்வேட்ஸ்: மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக்.