பிபா உலகக்கோப்பை 2022: பிரான்ஸ் அணியின் நாயகனாக அசத்திய எம்பாப்பே..! கடந்து வந்த கடினமான பாதை..!

பிபா உலகக்கோப்பை 2022 சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி வென்ற போதிலும் இறுதிவரை போராடி தனி ஒருவனாக பிரான்ஸ் அணிக்காக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம்வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி தான் கால்பந்து உலகில் பேசப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்
பிரான்ஸ் அணிக்கும் அர்ஜென்டினா அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் முதலிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு மிகவும் அருகிலிருந்த வேளையில், யாருமே எதிர்பாராத விதமாக இறுதி நிமிடங்களில் அடுத்தது கோல்களை அடித்து தங்களை விட்டுச் சென்ற வெற்றியைத் திரும்பவும் தங்கள் பக்கம் தனிஒருவனாக போராடிக் கொண்டு வந்த வீரன் தான் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே.
இந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய எம்பாப்பே மட்டும் 4- கோல்களை அடித்தார். அர்ஜென்டினா அணியின் முன்னனி வீரர்கள் உட்பட அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஒரு சில நிமிடங்கள் வியப்பில் ஆழ்த்தியது இவரது சிறப்பான ஆட்டம். மேலும் இந்த உலகக்கோப்பை 2022 தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வகையில் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார்.
யார் இந்த கைலியன் எம்பாப்பே
பிரான்ஸ் நாட்டின் அதிபரே அரங்கத்திலிருந்து இறங்கி வந்து தங்கள் அணியின் தோல்விக்காக வருந்திய கைலியன் எம்பாப்பேவை ஆறுதல் படுத்தினார். இத்தனை பெருமைகளுக்கு சொந்தகாரரான எம்பாப்பேவின் ஆரம்பகால கால்பந்து பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. இவர் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாடத் தொடங்கிவிட்டார். அதற்குக் காரணம் இவரது தந்தை மற்றும் தாய் இருவருமே கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்பது தான். எம்பாப்பேவின் தந்தை ஆரம்பக்காலத்தில் தனது மகனின் திறமையை அறிந்து அவரை பலவகையில் ஊக்கப்படுத்தியுள்ளார்.
கைலியன் எம்பாப்பேவின் சொந்த ஊர் பிரான்ஸ் நகரின் தலைநகரான பாரிசுக்கு பக்கத்தில் உள்ள போண்டி. அந்த நகரத்தில் மட்டும் பல நகரங்களில் இருந்து வந்த மக்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி வாழ்ந்து வருகிறார்கள். அந்த சிறிய நகரத்தின் நுழைவாயிலில் எழுதப்பட்டிருக்கும் வாசகமே அனைவருக்கும் நம்பிக்கை தரும் ஒன்றாகத் தான் உள்ளது "இந்த நகரத்தில் எதுவும் சாத்தியம்" என்பது தான். இதனை நன்றாக உணர்ந்ததால் தான் எம்பாப்பே இப்போது உலகம் போற்றும் வீரராக உள்ளார் என்றே கூறலாம்.
கால்பந்து உலகில் அடுத்த தலைமுறையின் சிறந்த வீரர் இவர் தான் என்று அனைவராலும் போற்றப்படும் கைலியன் எம்பாப்பே தனது முதல் கிளப் போட்டி தேர்வுக்கு வேறு ஒருவரின் வாகனத்தில் லிப்ட் கேட்டுத் தான் சென்றார் என்பதை அறியும் பொழுதே அவரின் வாழ்க்கையில் தான் தற்போது இருக்கும் இடத்தை அடைய எவ்வளவு முயன்றிருப்பார் என்று தெரியவருகிறது.
ஆரம்ப காலத்தில் சோதனை
மொனாகோ கிளப்பில் தேர்வான இவருக்கு ஆரம்பக்காலத்தில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளார். எம்பாப்பேவின் ரோல் மாடல்
போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ தான், அவரை போல விளையாட நினைத்ததால் அவரின் ஸ்டைலை பின்பற்றி உள்ளார். இதனால் ஆட்டத்தில் சிறப்பாகப் பங்களிக்க முடியாமல் தவித்தார், எம்பாப்பேவின் தந்தை இவை அனைத்தையும் கவனித்து இவருக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார் "உனது ஆட்டத்தை நீ விளையாட வேண்டும், மற்றவர்களைப் போல் விளையாட நினைக்க வேண்டாம் உனக்கென்று தனித் திறமை உண்டு, அதில் கவனம் செலுத்து" என்பது தான். இதனை உணர்ந்த எம்பாப்பே தனது ஆட்டத்தை மொத்தமாக மாற்றி புது விதமாகச் சிறப்பாக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் போற்றும் நாயகன்
எம்பாப்பே பல தடைகளை தாண்டி தனது முழுதிறமையையும் தனது அனைத்து போட்டிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆட்டத்தை பிரான்ஸ் அணியின் பல முன்னனி வீரர்கள் பாராட்டியுள்ளார். மேலும் பிரான்ஸ் அணியின் ஜாம்பவான் ஜிடாவே எம்பாப்பேவிற்கு பல உதவிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டின் அணியில் தேர்வாகிப் பல போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் 2017-ஆம் ஆண்டிலிருந்து பி.எஸ்.ஜி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.
நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்து அதை நோக்கி ஓடினால் கண்டிப்பாக இந்த உலகம் ஒருநாள் நம்மை நோக்கி ஓடி வரும். நமது இலக்கில் குறியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை கைலியன் எம்பாப்பே என்ற இளைஞரின் வாழ்க்கையிலிருந்து அறிய முடிகிறது. அடுத்த உலகக்கோப்பையில் தவிர்க்க முடியாத கால்பந்து வீரராக எம்பாப்பே இடம்பெறுவர் என்பதில் ஆச்சரியமில்லை.