தெற்காசிய கால்பந்து போட்டி; இறுதிப்போட்டிக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த போட்டி ஒன்றில் லெபனான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இந்த போட்டியில், போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் வெற்றி பெறவில்லை. எனினும், பெனால்டி முறையில் இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியது.
இந்திய அணி பெனால்டியில் 4-2 என்ற புள்ளி கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் குவைத் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில், வங்காளதேச அணியை 1-0 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
சமீபத்தில் சர்வதேச கால்பந்து சங்கமான பிபா அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் 36 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த அர்ஜென்டினா அணி நம்பர் 1 இடத்தில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் 2-வது இடத்தை பிடித்தது. பிரேசில் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், பெல்ஜியம் 5-வது இடத்திலும் உள்ளன. சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.