கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!!

கால்பந்து விளையாட்டின் ஆல் டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான பிரேசில் ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முன்னதாக, புற்றுநோய் சிகிச்சையை மறு மதிப்பீடு செய்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சுவாச தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பீலே தனது பெருங்குடலில் இருந்து கட்டி அகற்றப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த முன்னோடிகளில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே தனது 16வது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் மற்றும் 92 போட்டிகளில் 77 கோல்களை அடித்ததன் மூலம், அணிக்காக எல்லா நேரத்திலும் முன்னணி கோல் அடித்தவராக தனது வாழ்க்கையை முடித்தார்.
1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் பிபா உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் பீலே ஆவார்.
முன்கள வீரராக பார்வேர்ட் பொஷிஷனலில் ஆடும் பீலே, தனது விளையாட்டு வாழ்க்கையில் (1956-1974) 659 போட்டிகளில் 643 கோல்களை அடித்துள்ளார். அவரது கால்பந்து வாழ்க்கையின் இறுதி இரண்டு ஆண்டுகளில், பீலே அமெரிக்காவில் உள்ள நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடினார்.
பீலே ஆறு முறை (1961, 1962, 1963, 1964, 1965, மற்றும் 1968) பிரேசிலிய லீக் பட்டத்தை (காம்பியோனாடோ பிரேசிலிரோ சீரி ஏ) வென்றார். மேலும் 1962 மற்றும் 1963ல் இரண்டு முறை கோபா லிபர்டடோர்ஸை வென்றார். சான்டோவின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார்.