காலிறுதியில் பங்கேற்கும் 8 அணிகள் குறித்த ஒரு பார்வை.. அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார் யார்?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 08, 2022 & 19:29 [IST]

Share

பிபா உலகக்கோப்பை 2022 கோலாகலமாக கத்தாரில் நடந்து வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக மிகவும் பிரமாண்டமான வகையில் மைதானங்களை கத்தார் நகரில் அமைத்து போட்டியைக் காணவரும் கால்பந்து ரசிகர்கள் மிகவும் விமர்சியாக கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளுடன் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்தது.
  
உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள மொத்தமாக 32-நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் தேர்வாகின. முதலில் தொடங்கிய போட்டிகளில் 32-அணிகளை 8-பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த குறிப்பிட்ட பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

அடுத்தபடியாக தொடரின் அடுத்த சுற்றுக்கு 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாக்கவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு தற்போது 8-அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
 
காலிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள அணிகள் :
 
1.நெதர்லாந்து 
2.அர்ஜென்டினா
3.குரோஷியா
4.பிரேசில் 
5.இங்கிலாந்து 
6.பிரான்ஸ்
7.மொரோக்கோ 
8.போர்ச்சுகல் 
  
இந்த காலிறுதி போட்டிக்குப் பிறகு தகுதி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு அடுத்தாக முறையைத் தகுதி பெறும் இருஅணிகள் இறுதிப் போட்டியில் டிசம்பர்-18ஆம் தேதி லூசைல் மைதானத்தில்  விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காலிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள அணிகளின் முன்னோட்டம் :
 
முதல் காலிறுதி போட்டி :
 
இந்த 2022 உலகக்கோப்பையின் முதல் காலிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் பிரேசில் அணிகள் எடுகேஷன் சிட்டி மைதானத்தில் மோதவுள்ளார்கள். கடந்த உலகக்கோப்பையில் இறுதிவரை சென்று தோல்வியுற்ற குரோஷியா அணி இந்த முறை கண்டிப்பாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில்  மிகவும் சிறப்பாக தங்கள் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

ஆனால் எதிர் பக்கம் இருக்கும் பிரேசில் அணியைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். உலகக் கோப்பையின் நாயகன் அவர்கள் தான். 5-முறை உலகக்கோப்பையை வென்றவர்கள். இந்த முறையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். எனவே இந்த போட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது.
 
இரண்டாவது காலிறுதி போட்டி :
 
இரண்டாவது காலிறுதி போட்டியில் களமிறங்கும் அணிகள் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா தான். அவர்கள் லுசைல் மைதானத்தில் விளையாடப் போகிறார்கள். நெதர்லாந்து அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் மிகவும் திறமையாக விளையாடி முதல் அணியாகக் காலிறுதிக்குத் தேர்வானதற்கு அந்த அணியின் வீரர் "கோடி காக்போ" முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறுமுனையில்  லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் இருக்கும் அர்ஜென்டினா அணி, இந்த உலகக்கோப்பை அரங்கில் சற்று தாமதமாக வெற்றியைத் தொடங்கினாலும் அனைத்து அணிகளும் எதிர்நோக்கப் பயப்படும் முக்கிய அணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே இருஅணிகளுக்கு பலப்பரீட்சை கண்டிப்பாக நடக்கும் என்பதால் இந்த போட்டியிலும் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமிருக்காது.
 
மூன்றாவது காலிறுதி போட்டி :
 
மொரோக்கோ மற்றும் போர்ச்சுகல் அணி அல்துமா மைதானத்தில் மூன்றாவது காலிறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளன. இந்த இரு அணிகளும் காலிறுதிக்கு வரும் முன்னர் தங்கள் பிரிவில் இருக்கும் அணிகளை சிறப்பாகப் பதம் பார்த்து விட்டு தான் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

போர்ச்சுகல் அணி சார்பில் நட்சத்திர வீரர்கள் ரொனால்டோ, பெப்பே, புருனோ பெர்னாண்டஸ் எனப் பலர் உள்ளனர். மேலும் மொரோக்கோ அணி சார்பில் அக்ரப் ஹக்கீமி,மஸ்ரௌய்,ஹக்கீம் ஜியேச் போன்ற வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாகப் பங்களித்து வருகின்றனர். கால்பந்து ரசிகர்களின் கணிப்பில் போர்ச்சுகல் அணி மேலாகத் தெரிந்தாலும் மொரோக்கோ அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
 
நான்காவது காலிறுதி போட்டி:   

இந்த தொடரின் இறுதி மற்றும் நான்காவது காலிறுதி போட்டி அல் பைட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கவுள்ளது. கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி தங்கள் சாம்பியன் பட்டத்தை காத்துக்கொள்ளும் வகையில் சிறப்பாக விளையாடும். 

அதேவேளையில், இங்கிலாந்து இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து தோல்வியே சந்திக்காமல் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி கேனும் பிரான்ஸ் அணி சார்பில் கைலியன் எம்பாப்பேவும் சிறந்த போட்டியை வெளிப்படுத்துவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கருத்து.
 
பிபா 2022 உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுக்கு இடம்பெற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்கள் நேர்த்தியான ஆட்டத்தால் கால்பந்து ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்த 8 அணிகளில் எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.