பிபா உலகக்கோப்பை 2022 : தனிஒருவன் எம்பாப்பேவின் போராட்டம் வீண்..! 36 ஆண்டுகளுக்கு பிறகு தட்டித் தூக்கிய அர்ஜென்டினா!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 19, 2022 & 11:13 [IST]

Share

பிபா உலகக்கோப்பை 2022 தொடர் மிகவும் விமர்சியாக கத்தாரில் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் 32-அணிகள் பங்கேற்றன. பல சுற்றுகளின் அடிப்படையில் இறுதியாக நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றன.அதில் உலக கால்பந்து அணிகளில் முன்னிலையில் இருக்கும் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த தொடரில் சிறப்பாக முதல் போட்டியிலிருத்து விளையாடி இறுதிப் போட்டிவரை முன்னேறி உள்ள நிலையில் இந்த முறையும் கண்டிப்பாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

அதேபோல் அர்ஜென்டினா அணியும் இந்த உலகக்கோப்பையில் மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வரும் நிலையில் இறுதிப் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்று கால்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இத்தகைய எதிர்பார்ப்பிற்கு இடையில் லுசைல் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இறுதி போட்டி தொடங்கியது. அர்ஜென்டினா அணி வீரர்கள் முதலில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை முழுவீச்சில் தொடங்கினார்கள். 

இந்நிலையில் போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு வழங்கப்பட்ட பெனாலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி. அதனை தொடர்ந்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக போட்டியின் 36-வது நிமிடத்தில்  அர்ஜென்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா  ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம் போட்டியின் முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.

அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும் பிரான்ஸ் அணி வீரர்கள் சற்று துரிதமாகச் செயல் பட்டார்கள். இருந்த போதிலும் அவர்கள் சார்பில் எந்த கோலும் பதிவாகாமலே ஆட்டம் நகர்ந்தது. அப்போது பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன் கைலியன் எம்பாப்பே போட்டியின் 80-வது நிமிடத்தில் தங்கள் அணிக்குக் கிடைத்த பெனாலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

அதன்பின் அரங்கமே அதிரும் அளவிற்கு அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோலை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இவரின் 2-கோல்கள் மூலம் ஆட்டத்தின் இறுதியில் போட்டி  2-2 என்ற சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் அணியின் வெற்றியாளரை அறிய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இரு அணி வீர்களும் தங்கள் முழுப் பங்களிப்பையும் அளித்து விளையாடினார்கள். அப்போது போட்டியின் 109-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

அதன்பின் போட்டியின் 118-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காகத் தனது மூன்றாவது கோலை அடித்து உலகக்கோப்பையில் சாதனையைப் படைத்தார் எம்பாப்பே. இந்நிலையில் போட்டி மீண்டும் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து இந்த உலகக்கோப்பையின் வெற்றியாளரை முடிவு செய்ய "பெனாலிட்டி ஷூட்-அவுட்" முறைக்கு இருஅணி வீரர்களும் தயாராகினர்.

முதலில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே தனது வாய்ப்பில் கோல் அடித்தார் (1-0).

அடுத்தாக அர்ஜென்டினாவின் மெஸ்சி தனது பெனாலிட்டி வாய்ப்பில் அசத்தலாகக் கோல் அடித்தார்(1-1).

அதன்பின் பிரான்ஸ் வீரர் கோமன் அடித்த பந்தைத் தடுத்தார் அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ்(1-1).

அடுத்தாக அர்ஜென்டினா வீரர்  டிபாலா தனது வாய்ப்பில் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார் (2-1).

தனது அணியின் மூன்றாவது வாய்ப்பில் கோல் அடிக்க தவறினர் பிரான்ஸ் வீரர் சூமேனி (2-1)

அடுத்தாக அர்ஜென்டினாவின் பரெட்ஸ் தனது வாய்ப்பில் கோல் அடித்தார் (3-1)  

அதன்பின் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி ஒரு கோல் அடித்தார் (3-2)

இறுதியாக அர்ஜென்டினாவின் மான்டீல் ஒரு கோலை அடித்து (4-2) தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த 2022-உலகக்கோப்பையில்  பெனாலிட்டி முறையில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. இந்த உலகக்கோப்பை அரங்கில் 36-வருடங்கள் கழித்து மூன்றவது முறையாக அர்ஜென்டினா அணி  சாம்பியன் பட்டத்தை வெல்வது குறிப்பிடத்தக்கது.