FIFA World Cup 2022 : வீழ்ந்தது ஆஸ்திரேலியா.. காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!!
![FIFA World Cup 2022 : வீழ்ந்தது ஆஸ்திரேலியா.. காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1298.jpg)
FIFA World Cup 2022 : உலகக்கோப்பை சூப்பர்-16 சுற்றின் மூன்றாவது போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் விளையாடினார்கள். அர்ஜென்டினா அணியின் மெஸ்சி தனது முழு திறமையும் இந்த போட்டியில் காட்டும் என்றும், ஆஸ்திரேலியா அணியை அர்ஜென்டினா அணி எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே சமயம் ஆஸ்திரேலியா அணியும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும் போட்டி கொடுக்கும் உறுதியுடன் இருந்த நிலையில், இந்த போட்டி தொடங்கியது முதலே முழுவீச்சில் செயல்பட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் முதல் கோலை அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். அர்ஜென்டினா அணி வீரர் அலெஜான்ட்ரோ கோம்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார்.
அடுத்தாக போட்டியின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரு கோலை அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.இதற்குப் பதில் கோல் எதுவும் ஆஸ்திரேலியா அணிசார்பில் அடிக்காத நிலையில் போட்டியின் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி முன்னிலையிலிருந்தது.
போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியது முதலே ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தனது அணிக்கான கோல் முயற்சியில் இறங்கினார்கள். ஆஸ்திரேலியா அணியின் கோல்கீப்பர் செய்த தவறை சரியாக பயன்படுத்திய அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரெஸ் போட்டியின் 57-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
அதன் பிறகு போட்டியின் 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் கிரேக் குட்வின் அடித்த பந்து அர்ஜென்டினா அணியின் வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் மேல் பட்டு கோலாக மாறியது. இதன் மூலம் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் கோலை பதிவு செய்தது.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியா அணியை வென்றது. முதல் நாக்-அவுட் போட்டியில் வென்ற நெதர்லாந்து அணியை அடுத்தாக அர்ஜென்டினா அணி எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.