விம்பிள்டன் : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், அல்காரஸ்

விம்பிள்டன் தொடரில் மூன்றாவது சுற்றில் விளையாடிய ஜோகோவிச், சுவிட்சர்லாந்து வீரரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்காவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் இரண்டு செட்களை 6-3, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 3வது செட் ஆட்டத்தில் ஜோகோவிச்சுக்கு சற்று நெருக்கடி கொடுத்த வாவ்ரின்கா கடுமையாக போராடினார்.
ஆனால் இறுதியில் 3வது செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இறுதியில் 6-3, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வாவ்ரின்காவை வீழ்த்தி ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), பிரான்சின் அலெக்சாண்டர் முல்லெரை சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து 2-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் யோசுக் வதானுகியை (ஜப்பான்) தோற்கடித்தார். இதே போல் 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே (டென்மார்க்) 6-3, 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்டில் கார்பல்லெஸ் பானாவை (ஸ்பெயின்) விரட்டினார். டேனில் மெட்விடேவ் (ரஷியா). பெரேட்டினி (இத்தாலி), ஹர்காக்ஸ் (போலந்து), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.