விம்பிள்டன் டென்னிஸ் : நடப்பு சாம்பியன் ரைபகினா அதிர்ச்சி தோல்வி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 6-7(3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா ( பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை வீழ்த்தினார் . இன்னொரு கால்இறுதியில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில ரைபகினாவிடம் அடைந்த தோல்விக்கு ஜாபியர் பழிதீர்த்துக் கொண்டார். ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்விடோலினா(உக்ரைன்)- வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார். இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.