ரியல் கேப்டன் கூல் தோனியல்ல.. தல ரசிகர்களை வம்புக்கு இழுத்த சுனில் கவாஸ்கர்!

மும்பை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி உலகக்கோப்பை வென்று 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற வீரர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டவர். இதனையடுத்து சுனில் கவாஸ்கர், தோனி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியை ரசிகர்கள் பலரும் கேப்டன் கூல் என்று கொண்டாடி வருவார்கள். அதற்கு களத்தில் தோனி கோபத்தை வெளிக்காட்டாததும், வீரர்களை பயன்படுத்தும் விதமே காரணமாகும். இந்த நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 1983 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும்.
குறிப்பாக பைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் பீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது.
அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும். இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.