மீண்டும் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா... டைமண்ட் லீக்கில் தொடரும் பதக்க வேட்டை... வீரருக்கு குவியும் பாராட்டுகள்...

சுவிட்சர்லாந்து : லாசனே நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று பலரையும் கவனிக்க செய்தார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்தார். நாட்டின் மூலை முடுக்கெங்கும் நீரஜ் சோப்ராவை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டைமண்ட் லீக் பைனலில் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
நீரஜ் சோப்ரா வின் தொடர் சாதனைகளால், கடந்த மாதம் உலகத் தடகள கூட்டமைப்பு வெளியிட்ட ஈட்டி எறிதலுக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு அவர் முன்னேறினார். இதன் மூலம் உலக சாம்பியனான கிரெனடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை, நீரஜ் முந்தியுள்ளார். மொத்தம் 1,455 புள்ளிகளை அவர் பெற்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ், 1,433 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் தடகளப் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சோப்ரா படைத்தார்.
இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார். நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு இதே தொடரில், 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.