தோனினாலே அந்த ஹெலிகாப்டர் ஷாட்டும், மின்னல் வேக கோல் கீப்பிங்கும்தான்... பக்குவமான கேப்டனின் மற்றொரு பரிணாமம்...

மின்னல் வேக கோல்கீப்பர், அந்த ஹெலிகாப்டர் சிக்ஸர், பக்குவமான கேப்டன் என பல பரிமாணங்களில் விளையாடும் தோனி குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 42. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார்.
கிரிக்கெட் உலகில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்கள் வேறு ரகம். அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் அடித்து பறக்கவிடும் பந்தோடு சேர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களும் ‘சிக்ஸ் போகணும்’ என பறக்கும். அந்த அளவிற்கு தனது ஆட்டத்திறனால் ரசிகர்களை கட்டிப்போடும் காந்த சக்தியை தன்னகத்தே கொண்டவர்.
தோனி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து 360 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 239 சிக்ஸர்கள். இது தவிர பிஹார், ஜார்க்கண்ட், கிழக்கு மண்டலம், ரயில்வே, கிளப் போட்டிகள், ஜூனியர் கிரிக்கெட், மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கிரிக்கெட் என எத்தனை சிக்ஸர்கள் அடித்திருப்பார் என்பதற்கு கணக்கு இல்லை. எப்படி அதை சேர்த்தால் சுமார் 1000 சிக்ஸர்களை தோனி விளாசி இருப்பார்.
2007ஆம் ஆண்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக வழி நடத்திய அவர் டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக மகத்தான சாதனை படைத்துள்ளார். அதே போல் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ள அவர் பல ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.
அப்படி பல பரிணாமங்களை கொண்ட தோனி விக்கெட் கீப்பராக இந்த உலகிலேயே புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது. குறிப்பாக பள்ளி அளவில் கோல் கீப்பராக இருந்த அவர் இளம் வயது பயிற்சியாளரின் ஆலோசனையால் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய காரணத்தாலேயே புத்தகத்தில் இருக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல் தமக்கென்று புதிய ஸ்டைலை உருவாக்கினார்.
கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.