ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்திய இந்திய ஜோடி!

சீனா: ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள ஹுவாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட, இவான் யூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி 11-10, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023, சென்னையில் வரும் கடந்த மாதம் நடைபெற்றது. 2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்திய இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்றனர்.
இதன் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட எகிப்து அணி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதல் இடம் வென்ற எகிப்து அணிக்கு தங்க கோப்பையும், இரண்டாம் இடம் வென்ற மலேசியா அணிக்கு வெள்ளி கோப்பையும், மூன்றாம் இடத்தை வென்ற இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு வெண்கல கோப்பையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.