செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய தோனி.. ஜாலி வீடியோ வெளியீடு! | Dhoni's Birth Day Viral Video

மும்பை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது 42வது பிறந்தநாளை செல்லப் பிராணிகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் கேப்டனாக டி20, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட மூன்று விதமான கோப்பைகளை வென்றவர் தல தோனி. அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார் எம்எஸ் தோனி. இந்த நிலையில் நேற்று 42வது பிறந்தநாளை தோனி கொண்டாடினார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சமகால கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவாறு புகைப்படங்களை பகிர்ந்தும், கட் அவுட் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எம்எஸ் தோனி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தப் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் வீட்டின் முன் குவிந்தனர். இதனையறிந்த தோனி, தனது வீட்டில் மேல் வந்து ரசிகர்களுக்கு கைகளையாட்டி சென்றார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஹர்ஷா போக்ளே என்ன பதிவிட்டுள்ளாரோ, அதனையே தோனியும் செய்திருக்கிறார். சாதாரண கேக்கை வெட்டி தனது செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கேக்கை வெட்டி ஒவ்வொரு துண்டாக ஒவ்வொரு நாய்-க்கும் வீச, அந்த கேக்கை அனைத்து நாய்களும் சரியாக கேட்ச் பிடித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது.