பிசிசிஐ கொண்டுவரும் புதிய விதிமுறையால் அம்பதி ராயுடுவுக்கு ஆப்பு... போட்டத்திட்டம் பொசுக்கின போனதால் வீரர் விரக்தி...

மும்பை: வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்கதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் இருந்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு விலகியுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்தவர் அம்பத்தி ராயுடு. 37 வயது நிரம்பிய இவர் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய இவர் ஐபிஎல்லில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ்மேன்னாக திகழ்ந்தார். 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்தார்.
நடந்து முடிந்த சீசனில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியுடன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். அதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, ஐபிஎல் டிராபியுடன் சென்று அம்பத்தி ராயுடு சந்தித்தார். இதையடுத்து அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு அம்பத்தி ராயுடு அரசியலில் நுழைவதாக தொடர்ந்து தகவல்கள் கசிந்தன.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ‛‛ஆந்திரமாநில அரசியலில் களமிறங்குவேன். ஆனால் அதற்கு முன்னதாக மக்களின் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார். இது ஒரு புறம் இருக்க
அமெரிக்க மேஜர் லீக் தொடரில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த அணியில் அம்பத்தி ராயுடு விளையாடும் நிலையில், இதற்காகத்தான் அவர் முன்கூட்டியே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில், கூலிங் ஆஃப் காலம் என்ற திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. கூலிங் ஆஃப் காலம் என்பது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்பாக சில காலம் கிரிக்கெட் தொடர்பாக நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதன்பின்னர் வெளிநாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் பங்கேற்க முடியும் என்று விதிகளை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்பத்தி ராயுடு அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில், மேஜர் லீக் தொடரின் முதல் சீசனில் இருந்து அம்பாதி ராயுடு சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதனால் இம்முறை டெக்ஸாஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.