தோனிக்கு 77 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!

சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் 77 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணியின் பொற்காலமாக எம்எஸ் தோனியின் கேப்டன்சி காலத்தை சொல்லலாம். அண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போது கூட பலரும் தோனியை பற்றி பேச தொடங்கினார்கள்.
41 வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக 5வது முறையாக வென்று தன்னிகரற்ற வீரராக தோனி வலம் வருகிறார். அதேபோல் இந்திய அணியில் இப்போது விளையாடி வரும் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என்று சீனியர் வீரர்கள் அனைவரின் வளர்ச்சியிலும் தோனி முக்கிய அங்கமாக இருந்து வந்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்தும், இன்றும் தோனியின் மீதான வெளிச்சமும் சிறிதும் குறையவில்லை.
அந்த அளவிற்கு ரசிகர்கள் தோனியை கொண்டாடி வருகிறார்கள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சென்னை அணி விளையாடிய ஆட்டங்களில் எல்லாம் எதிரணி ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சி அணிந்து தோனியை வரவேற்றனர். அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி நாளை தனது 42வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர், குடும்பத்துடன் நேரம் செலவிடுவார் என்றே பார்க்கப்படுகிறது.
ஆனால் தோனி கொண்டாட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். ஐதராபாத்தில் தோனிக்கு 77 அடியில் முழு நீல கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இது ரசிகர்களிடையே மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் தோனிக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தோனி ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.