ஆஷஸ் தொடர்; இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை ஓரங்கட்டும் ஆஸ்திரேலியா... என்னதான் ஆச்சு உங்களுக்கு... சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்...

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை விட 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஐந்து போட்டிகள் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் கொண்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.
அந்த அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜோ ரூட் 19 ரன்னுடனும் ஜானி பேர்ஸ்டோவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிக்கொடுத்த வண்ணம் இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் 80 ரன்கள் விளாச, மற்ற வீரர்கள் அனைவரும் ஃபெவிலியன் திரும்பியவாறு இருந்தனர். இதனால் அந்த அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து 116 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் உஸ்மான் காவாஜா 43 ரன்களில் ஆட்டமிழக்க, களத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலியா 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது