ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் சாஹல் முக்கிய வீரராக இருப்பார்: சவுரவ் கங்குலி கணிப்பு!

மும்பை: டி20 உலகக்கோப்பையில் செய்த தவறை 50 ஓவர் உலகக்கோப்பையில் செய்யக் கூடாது என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் முதன்மையான வீரராக மாறியுள்ளார் சாஹல். இவரை தவிர்த்ததன் விளைவாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இருமுறை இழந்துள்ளது. அண்மையில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளையும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய மைதானங்களில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் எப்படி வீச வேண்டும் என்பதை சாஹலை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்.
இந்த நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியில் சாஹல் முக்கிய வீரராக இருப்பார் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி பேசுகையில், இந்தியாவில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் உள்ளிட்ட தரமான விரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகக்கோப்பையை வெல்வதற்கு சாஹல் முக்கிய வீரராக இருக்கப் போகிறார். இவர்கள் மூவருமே முக்கியத் தொடர்களில் கழற்றிவிடப் படுகிறார்கள்.
ஆனால் சாஹல் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார். குறிப்பாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அட்டகாசம் செய்கிறார். அதனால் சாஹலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவார்கள். தற்போது உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால் சாஹலை நன்றாக பயன்படுத்த வேண்டும்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பியூஷ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டார். எப்போதும் முக்கியமான தொடர்களில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். 2007ல் தென்னாப்பிரிக்கா சென்றபோது கூட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். அதனால் சாஹலை இந்திய அணி நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.