ஒருநாள் தொடரில் பல ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து..!! விராட் கோலி அசத்தல்..!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், அணிக்காக சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர் விராட் கோலி முன்னாள் வீரர்கள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற நிலையில் இழந்தது, குறிப்பாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று சம நிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இறுதிவரை முயன்ற இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தொடரை இழந்தது.
இந்த 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக போராடிய முன்னணி வீரர் விராட் கோலி 54(72) ரன்கள் பதிவு செய்தார், இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை ஒருநாள் தொடரில் முறியடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அரைசதம் கடந்த நிலையில் இந்திய மண்ணில் இதுவரை நடந்த 110 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5447 ரன்கள் பதிவு செய்தார், இதன் மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற 2வது வீரர் என்ற சாதனையை படைத்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ரிக்கி பாண்டிங் உடைய சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்கள் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளார், இதில் 2வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ரிக்கி பாண்டிங் 5406 ரன்களுடன் இருந்த நிலையில், தற்போது விராட் கோலி இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 19 அரைசதங்களுடன் 3வது இடத்தில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் உடன் இணைத்துள்ளார், மேலும் இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 24 அரைசதம் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் 23 அரைசதம் பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 47 முறை அரைசதம் அடித்து தென்னாபிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் உடைய சாதனையை முறியடித்துள்ளார், அதாவது காலிஸ் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 46 அரைசதம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவு செய்த ஒருநாள் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு தவறுகளை சரி செய்து, அடுத்து இந்திய மண்ணில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் அந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிகளை பெற இந்திய அணியின் விராட் கோலி முக்கிய காரணமாக இருப்பார் என்று கூறினால் மிகையில்லை.