IND VS AUS TEST 2023 : டெல்லி டெஸ்ட் போட்டியில் சேவாக் சாதனையை முறியடித்த விராட் கோலி..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய டெல்லி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் உடைய பல நாள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது, கடைசியாக நடைபெற்ற டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்து அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 44 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 20 ரன்களையும் பெற்றார்.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கை பின்தள்ளி விராட் கோலி முன்னிலை வகித்துள்ளார். அதாவது பார்டர் கவாஸ்கர் தொடரில் சேவாக் 1738 ரன்கள் பதிவு செய்திருந்த நிலையில், டெல்லி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸை சேர்த்து 64 ரன்கள் பெற்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் தொடரில் 1758 ரன்கள் பதிவு செய்தார்.
இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் தொடரில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள 34 வயது வீரர் விராட் கோலி 44.26 சராசரியுடன் 7 சதம் மற்றும் 5 அரைசதம் உட்பட 1758 ரன்கள் பெற்று வீரேந்தர் சேவாக் சாதனையை முறியடித்தார், இந்த சிறப்பு வாய்ந்த பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 56.24 சராசரியுடன் 9 சதம் 16 அரைசதம் உட்பட 3262 ரன்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, இதே போட்டியில் தான் வேகமாக 25000 சர்வதேச ரன்கள் பெற்று வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். மேலும் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 48.49 சராசரியுடன் 8195 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.