தொடர் சாதனைகள் மழையில் விராட் கோலி..! சச்சினின் அடுத்த “வாரிசு” ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 16, 2023 & 10:06 [IST]

Share

இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையை படைத்தது.இந்த சாதனையை இந்திய அணி படைக்க முக்கிய காரணமாக இருந்த அணியின் மிரட்டல் வீரர் விராட் கோலி தனது பங்கிற்கு ஒரு  சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை துவம்சம் செய்தது என்றே சொல்லலாம், இதற்கு முக்கிய காரணம் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தான் தனது அதிரடி பேட்டிங்கால் எதிரணியின் பௌலிங்கை மட்டும் இல்லாமல் அவர்கள் மனதையும் சிதறடித்தார் என்று கூறினால் மிகையில்லை.

இந்த போட்டியில் விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 8 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் உட்பட 166*(110) ரன்களை பதிவு செய்தார், இந்த போட்டியில் கோலி சதம் அடித்ததன் மூலம் இந்திய மண்ணில் அதிக சதங்கள் (21) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்க படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்கள் அடித்தது தான் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் அடித்த  அதிக சதங்கள் என்ற சாதனையை பெற்றிருந்தது. இந்த தொடரின் மூலம்  கோலி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் 34-வயதான விராட் கோலி தான் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது. மேலும் ஒருநாள் போட்டிகளில்  விராட் கோலியின் 46-வது சதமாக இது பதிவானது இன்னும் ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் கோலி அடித்தால் ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த  சதங்களின் எண்ணிக்கையும் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.