தோனிக்கும், கோலியும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்: யுவராஜ் சிங் நெகிழ்ச்சி

சென்னை: புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தபின், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்ததற்கு தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின், கிரிக்கெட்டின் உச்சாணி கொம்பில் இருந்த போது திடீரென எற்பட்ட புற்றுநோய் பாதிப்பு, யுவராஜ் சிங்கின் மொத்த வாழ்க்கையும் புரட்டிபோட்டது. அங்கிருந்து மீண்டும் கிரிக்கெட்டை தொடங்கி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது, பழைய ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை.
குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான 2014ஆம் ஆண்டு டி20 உலக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் யுவராஜ் சிங் மீண்டும் கோலி கேப்டன்சியில் கம்பேக் கொடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கி அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் கொடுத்த மாஸ் கம்பேக் அது. அதன்பின்னர் மோசமான ஃபார்ம் காரணமாக வெளியேறினாலும், ரசிகர்கள் முன் கம்பீரமாகவே வெளியேறினார். அதன்பின்னர் சுப்மன் கில், அபிஷேக் சர்மா உள்ளிட்டோரின் வளர்ச்சியில் யுவராஜ் சிங் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் கம்பேக் பற்றி யுவராஜ் சிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு நான் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட போது அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலியும், முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியும் எனக்கு முழு ஆதரவை அளித்தார்கள். குறிப்பாக விராட் கோலி ஆதரவளிக்கவில்லை என்றால், என்னால் கம்பேக் செய்திருக்கவே முடியாது. அவர்கள் இருவரும் எந்த அளவிற்கு உதவி செய்ய முடியுமோ அனைத்தையும் எனக்காக செய்தார்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.