WPL 2023 : இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அசத்தல்..!! குஜராத் ஜெயின்ட்ஸ் போராட்டம் வீண்..!!

இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் மிகவும் அதிரடியான வகையில் அமைந்த நிலையில், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 வது லீக் போட்டியும் மிகவும் விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அணியின் நிலையை சரி செய்யும் வகையில் அணியின் இளம் வீராங்கனை ஹர்லீன் டியோல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 46(32) ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி 169 ரன்கள் பதிவு செய்தது. இந்நிலையில் 170 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய கிரண் நவ்கிரே அரைசதம் கடந்து 53(43) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த உ.பி. வாரியர்ஸ் அணியை அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெற்றியை நோக்கி அழைத்து சென்றார் வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ், 26 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமல் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தார்.
இந்த தொடரில் சினே ராணா தலைமையில் இயங்கும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி இறுதி வரை போராடியும் தனது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உ.பி. வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய கிரேஸ் ஹாரிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.