உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து என் சிறுவயது முதல் ஒவ்வொரு நாளும் கனவு காண்பேன்... மனம் திறக்கும் திலக் வர்மா...

உலகக்கோப்பையில் எப்படி விளையாடுவது என ஒவ்வொரு இரவிலும் கனவு காண்கிறேன் என்று சர்வதேச போட்டியில் முதன்முறையாக விளையாட இருக்கும் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்ய குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்டு களமிறங்கும் இந்த அணியில் ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சஞ்சு சாம்சனும் அணியில் இடம் பெற்றுள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் பலரையும் கவனிக்க வைத்த 20 வயதான இளம் வீரர் திலக் வர்மாவும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
"கிரிக்கெட்டுக்கான அனைத்து நுட்பமும் அவருக்கு தெரிகிறது. நிச்சயம் அவர் இந்தியாவுக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடுவார்" கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற திலக் வர்மா குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறிய வார்த்தைகள் தான் இது. அவர் கூறியபடியே ஓராண்டுக்குள் சர்வதேச போட்டியில் கால் தடம் பதிக்க இருக்கிறார் திலக் வர்மா.
இந்தியாவுக்காக டி20 அணியில் பங்கேற்றது குறித்து மனம் திறந்துள்ள இந்த இளம்வீரர், தான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. துலீப் கோப்பைக்காக பெங்களூருவில் இருக்கும் தன்னிடம் தனது பெற்றோர் தான் இரவில் வீடியோ காலில் கண்ணீர் மல்க இதை கூறினார்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவிடம் நிறைய விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும், அவர்கள் எப்போதும் களத்திற்கு வெளியே தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் மனம் திறந்து உள்ளார். உலகக் கோப்பை போட்டியில் தான் இருந்தால் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இரவிலும் கனவு காண்பேன். நான்காவது அல்லது ஐந்தாவது நிலை வீரராக களம் இறங்கினால் எப்படி அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று யோசிப்பேன் என்றும் திலக் வர்மா பேசியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டியில் தனது பேட்டிங் மூலம் பலரையும் கவனிக்க வைத்த, அந்தத் தொடரில் மட்டும் 397 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லிலும் அதிரடி ஆட்டத்தின் மூலம் மைதானத்தை அலற வைத்த அவர், தற்போது சர்வதேச அளவில் முதல் முறையாக விளையாட இருக்கிறார். திலக் வர்மாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.