விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பை இது: ஆசையை வெளிப்படுத்திய சேவாக்

மும்பை: சச்சின் ஆடிய கடைசி உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றதை போல், விராட் கோலி ஆடப்போகும் கடைசி உலகக்கோப்பைத் தொடரிலும் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று சேவாக் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதற்காக பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தியது. மும்பையில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஐசிசி நிர்வாகத் தலைவர் ஜியோஃப் அலார்டைஸ், பிசிசிஐ ஜெயலாளர் ஜெய் ஷா, இந்திய முன்னாள் சேவாக், இலங்கை ஜாம்பவான் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வீரேந்தர் சேவாக், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 2011ஆம் ஆண்டு கடைசி உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையை இந்திய வீரர்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கருக்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். தற்போது சச்சினின் இடத்தில் தான் இந்திய அணியின் விராட் கோலி இருக்கிறார்.
அவரும் தனது கடைசி உலகக்கோப்பை விளையாடப் போகிறார். விராட் கோலிக்காக அனைத்து இந்திய வீரர்களும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். விராட் கோலியும் சச்சினை போலவே இருக்கிறார். சச்சினை போலவே அனைத்து விஷயங்களிலும் விராட் கோலி நடந்து கொள்கிறார். ஜூனியர் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டுக்காக விராட் கோலி செய்துள்ள செயல்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் விராட் கோலி களமிறங்கும் போது தன்னால் முடிந்த அத்தனையையும் அணிக்காக செய்பவர். இந்த உலகக்கோப்பைத் தொடருக்காக நிச்சயம் அவர் ஆர்வமாக இருப்பார். இம்முறை மக்கள் விராட் கோலிக்கு அதிகளவில் ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.