கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்க கூடாது? வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேள்வி

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐபிஎல் மிகமுக்கியம் என்றும், கால்பந்து, கூடைப்பந்து வீரர்களை போல் கிரிக்கெட் வீரர்களும் கோடிகளில் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கிளைவ் லாய்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஐசிசி கோப்பை கிடைக்காத காரணத்தால் கேப்டன் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். ஆனால் ரோகித் சர்மாவும் இதுவரை ஐசிசி கோப்பையை வாங்கவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் ஆதிக்கத்தால் தான் இந்திய அணி ஐசிசி தொடரை கண்டு கொள்வதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாம்பவான் கிளைவ் லாய்ட் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் நீங்கள் ஐசிசி கோப்பையை நோக்கி சென்று விட்டீர்கள். இறுதிப் போட்டி, அரை இறுதி போட்டி என பலமுறை பல தொடர்களில் தகுதி பெற்று விட்டீர்கள்.
எனவே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இதற்கு முழு காரணமும் ஐபிஎல் தொடர் தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பான அணியாக விளங்குகிறது. உங்களிடம் சிறந்த டெஸ்ட் அணியும் இருக்கிறது. இதனால் மிகப்பெரிய தொடரை வெல்வது விரைவில் நிச்சயம் நடக்கும்.
இந்தக் காலச்சக்கரம் அதற்கு துணை நிற்கும். நிச்சயம் இந்திய அணி ஐசிசி கோப்பையை எதிர்காலத்தில் வெல்லும். ஐபிஎல் தொடர் பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது. உங்களுடைய இளமைப் பருவத்தில் தான் நீங்கள் விளையாட்டில் ஈடுபட முடியும்.
அப்போது உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் பிறகு எப்போது தான் கிடைக்கும். ஐபிஎல் தொடருக்கு என தனி கால அவகாசத்தை ஐசிசி வழங்க வேண்டும். கூடைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டில் கிளப் விளையாட்டு நடைபெறுகிறது. அதில் எல்லாம் கோடிக்கணக்கில் வீரர்கள் பணமாக பெறுகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் யாரும் எதுவும் சொல்லவில்லை. கிரிக்கெட் வீரர்களை மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள்?பணத்தைத் தேடி வீரர்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதே சமயம் ஒரு நாட்டில் சிறந்த வீரர்கள் என 20 பேரை தேர்வு செய்துவிட்டு, அதில் பத்து பேர் கடைசி நேரத்தில் வரவில்லை என்றால் நிச்சயம் அந்த நாட்டின் கிரிக்கெட் மோசமான நிலையில் தான் இருக்கும். முக்கியமான கிரிக்கெட் தொடரில் வீரர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.