தொடர்ச்சியாக 5 சதங்கள்.. ரோஹித், கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தமிழக வீரர்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 21, 2022 & 14:13 [IST]

Share

விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், இதில் பங்கேற்றுள்ள தமிழக இளம் வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்ததோடு, ரோஹித் சர்மா, விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி என்பது  இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் 50 ஓவர்கள் கொண்ட  உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இதனை மறைந்த முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட்டர் “விஜய்  ஹசாரே” பெயரில் பிசிசிஐ ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தி வருகிறது.

இதில் தமிழக மாநில அணி தான் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கடந்த விஜய் ஹசாரே போட்டியில் ஹிமாச்சல் பிரதேஷ் அணி தமிழக அணியை இறுதி போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

கலக்கிவரும் தமிழக அணி :

இந்த ஆண்டிற்கான விஜய் ஹசாரே டிராபி நடந்து வருகிறது. இதில் தமிழக அணி பாபா இந்திரஜித் தலைமையில்  சிறப்பாக ஆடி வருகிறது. தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது மேலும் தமிழக அணியின் சிறப்பான இந்த தொடக்கத்திற்கு காரணம்  அணியின் தொடக்க வீரர்களான என்.ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டம் தான்.

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு :

விராட் கோலி  தான் ஆடிய (2008-2009) தொடரில் மொத்தம் நான்கு சதங்களை அடித்திருந்தார். இந்நிலையில் ஜெகதீசன் இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சதமடித்து விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

உலக சாதனை

மேலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியதன் மூலம், உலக அளவில் முதல் தர கிரிக்கெட்டில் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் நடித்துள்ள இந்தியாவின் ப்ரித்வி ஷா, இலங்கையின் குமார் சங்ககாரா, தென்னாப்பிரிக்காவின் அல்விரா பீட்டர்சன் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

தமிழக வீரர் ஜெகதீசன்  இதுவரை ஆடிய போட்டிகளில்,

*முதல் சதம் - 114(112) ஆந்திர பிரதேஷ் அணிக்கு எதிராக
*இரண்டாவது சதம் -107(113) சத்தீஸ்கர் அணிக்கு எதிராக
*மூன்றாவது சதம் - 168(140) கோவா அணிக்கு எதிராக
*நான்காவது சதம் - 128(123) ஹரியானா அணிக்கு எதிராக
*ஐந்தாவது சதம் (இரட்டை சதம் ) - 277(141) அருணாச்சல பிரதேஷ் அணிக்கு எதிராகவும் எடுத்துள்ளார். 

இதற்கிடையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் எடுத்த உலகின் முதல் அணி என்ற சாதனையையும் தமிழகம் படைத்துள்ளது. அருணாச்சலத்திற்கு எதிராக 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்களை எடுத்து முடித்த தமிழகம் இங்கிலாந்தின் முந்தைய சாதனையான 498 ரன்களை (2022ல் நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 498) கடந்தது.

50 ஓவர் கிரிக்கெட்டில் தனிநபரின் அதிகபட்ச ரன்கள் (ஒரு இன்னிங்சில்)

277 - என் ஜெகதீசன் (தமிழ்நாடு) vs அருணாச்சல பிரதேசம் 2022

268 - அலிஸ்டர் பிரவுன் (சர்ரே) vs 2002 இல் கிளாமோர்கன்

264 - ரோஹித் சர்மா (இந்தியா) vs 2014 இல் இலங்கை

257 -டி'ஆர்சி ஷார்ட் (மேற்கு ஆஸ்திரேலியா) vs 2018 இல் குயின்ஸ்லாந்து

248 - 2013 இல் ஷிகர் தவான் (இந்தியா ஏ) vs தென்னாப்பிரிக்கா ஏ

உலக சாதனை பார்ட்னர்ஷிப்

2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சாமுவேல்ஸின் 372 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இன்று தமிழகத்தின் தொடக்க ஜோடி ஜெகதீசன் மற்றும் பி சாய் சுதர்சன் ஆகியோர் இன்று முறியடித்து தொடக்க பார்ட்னர்ஷிப்பில் 416 ரன்களை சேர்த்தனர்.

இவ்வாறு தொடர் சாதனைகளை புரிந்து வரும் ஜெகதீசனைத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு வேண்டாம் என ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவித்துள்ளது. ஜெகதீசனின் அசாத்திய பெர்பார்மன்சால், வரக்கூடிய மினி ஏலத்தில் அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கலாம்.