T20 World Cup 2022 ENG vs SL : நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு பெப்பே.. இலங்கையை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!!
T20 World Cup 2022 ENG vs SL : ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு, அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷங்க, குஷால் மெண்டிஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாணுகா ராஜபக்சேவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன் எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.
பதும் நிஷங்க அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து 67 ரன்களும், குஷால் மெண்டிஸ் 18 ரன்களும், பாணுகா ராஜபக்சே 22 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இலங்கை தட்டுத்தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 142 ரன்கள் எனும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்சும் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.
இதனால் எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்த நிலையில், ஜோஸ் பட்லர் 28 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களிலும் அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்ததோடு ஒன் டவுனாக களமிறங்கிய பென் ஸ்டாக்ஸை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் அசால்ட்டாக ஜெயித்து விடும் என நினைத்த இங்கிலாந்து அணி 20வது ஓவர் வரை போராடியே வென்றது. கடைசி 6 பந்தில் 5 ரன்கள் தேவை எனும் இக்கட்டான நிலைக்கு சென்ற இங்கிலாந்து அணியின் ஆபத்பாந்தவனாக கடைசி வரை நின்ற பென் ஸ்டோக்ஸ் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.
மேலும் இங்கிலாந்து இந்த வெற்றியின் மூலம் போட்டியை நடத்தும் மற்றும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை புள்ளிப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குள் முன்னேறியுள்ளது. குரூப் 1'இல் ஏற்கனவே நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது அணியாக இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளது.
நாளை நடைபெறும் மூன்று போட்டிகளில் இருந்து குரூப் 2'இல் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.