விராட் கோலி, ஜடேஜா அல்ல.. இவர்களை இருவரையும் பார்த்துக் கொள்ளுங்கள்.. கிறிஸ் கெய்ல் கணிப்பு

மும்பை: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய வீரர்களாக இருக்கப் போகிறார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிட்டதில் இருந்து அதுகுறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது உலகக்கோப்பை அனுபவங்கள் குறித்தும், கணிப்புகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதேபோல் இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக பலரும் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பேசுகையில், உலகக்கோப்பைத் தொடரை இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பை என்று பலரும் சொல்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. அடுத்த உலகக்கோப்பையிலும் விராட் கோலி விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு வீரருக்கும் கிரிக்கெட் வாழ்க்கையில் கடினமான தருணங்கள் இருக்கும். அதுபோன்ற தருணங்களில் இருந்து மீண்டு வருவதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலமாக இருக்க வேண்டும். அதனால் இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஆஷஸ் தொடரை விட அதிக சுவாரஸ்யங்களை அளிக்கும். அதனால் அந்தப் போட்டியை அதிகமாக எதிர்பார்க்கிறேன். அதேபோல் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் முக்கியமான வீரர்கள். அவர்களால் தான் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.