முதல் வெற்றியை பதித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. ஒத்தையா நின்னு மாஸ் காட்டிய ராகுல் த்ரிப்பாட்டி.. | IPL 2023 PBKS vs SRH Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 14வது லீக் போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் முதல் ஓவரை வலதுகை வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் வீச, முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் 0(1) அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது. இம்பேக் ப்ளேயராக பஞ்சாப் அணியின் சார்பில் ரஸா களமிறக்கப்பட்டு அவரும் ஏமாற்ற, அணியின் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மேலும், தனது அணிக்கு ஷிகர் தவான் 99(66) ரன்களையும் குவித்துக் கொடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் அடுத்தடுத்த களம்கண்ட வீரர்களும் சொதப்ப இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
அதன்பின் பேட்டிங் செய்ய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஹாரி ப்ரூக் களமிறங்கினர். தொடர்ந்து விளையாடிய இந்த கூட்டணி தனது முதல் விக்கெட்டை 13 ரன்களிலும், இரண்டாவது விக்கெட்டை 21 ரன்களிலும் இழந்தது. அதன் பின்னர் ராகுல் த்ரிப்பாட்டியும் ஹைதராபாத் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டநாயகனுமான மார்க்ரம் (37) இணைந்து பொறுப்பாக விளையாடினர்.
இவர்களின் கூட்டணி ஹைதராபாத் அணியின் ரன்களை மளமளவென அதிகரித்தது. அரை சதம் அடித்து அசத்திய ராகுல் த்ரிபாட்டி (74) மீண்டும் அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் எகிறிக்கொண்டே போனது. இறுதியாக, ஹைதரபாத் அணி 17.0 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது சொந்த மண்ணில் களம்கண்ட ஹைதராபாத் அணி இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2023 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.