ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் இவர் தான்..!! சுனில் கவாஸ்கர் கணிப்பு..!!

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ஓய்வு பெறப் போவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையில் முன்னணி வீரர்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக வழி நடத்தி 4 முறை சாம்பியன் பட்டங்களை பெற்று தந்த பெருமைக்குரிய கேப்டன் தோனி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு பிறகு ஐபிஎல் இல் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சென்னை அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவின் உள்நாட்டு தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு உள்ளார், மேலும் ஒரு அணியில் உறுதியாக இடம்பெறும் வீரர் தான் கேப்டனாக செயல்பட முடியும் அந்த வகையில் தனது அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியின் முக்கிய வீரராக ருதுராஜ் திகழ்வதால் அடுத்த கேப்டனாக வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அனுபவ மற்றும் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி அணியில் இருக்கும் போதே அடுத்த புதிய கேப்டனை நியமித்து அணியை வழிநடத்த எடுக்கப்பட்ட முயற்சி சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.மேலும் மீண்டும் தோனி தலைமையில் சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டால், சென்னை அணியின் எதிர்காலத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், கவாஸ்கரின் கருத்துக்கு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.