ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் ..!! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெருமைப்படுத்தியது..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கி வரும் ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதுவரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளை வழங்கி பெருமை படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான போட்டிகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் 20 பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறப்பாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரை உலகெங்கும் எடுத்து சென்ற வீரர்கள் தான் என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கும் வீரர்களுக்கு சாதனை அடிப்படையில் விருதுகளை வழங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கௌரவித்துள்ளது, இந்நிலையில் சிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பௌலர், இம்பாக்ட் பிளேயர் , சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் என்ற அடிப்படையில் விருதுகளை வழங்கியது.
ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் :
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்று தேர்வாகி விருதை வென்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி யும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் சிறந்த பவுலர் :
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பவுலிங்கை வெளிப்படுத்தி, பல முக்கிய தருணங்களில் வெற்றியை பெற்று தந்துள்ள ஜஸ்பிரிட் பும்ரா ஐபிஎல் தொடரின் சிறந்த பவுலர் விருதை வென்றுள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் தேர்வான நிலையில் பும்ரா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் :
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தந்து அசத்திய மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்றுள்ளார், இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னாவும் இடம் பெற்றிருந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் அதிரடி பிளேயர்கள் :
சிறந்த இம்பாக்ட் பிளேயர் :
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தனி ஒருவனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் சிறந்த இம்பாக்ட் பிளேயர் விருதை வென்றுள்ளார்,ரஸ்ஸல் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியின் போக்கை எப்போது வேணாலும் மாற்றும் தன்மை கொண்டவர் என்று கூறினால் மிகையில்லை. இந்த விருதுக்கான பரிந்துரையில் ஷேன் வாட்சனும் இடம் பெற்றிருந்த நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சீசனில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய வீரர் :
ஐபிஎல் தொடர் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன தொடர் கூறினால் மிகையில்லை, இந்த வரிசையில் ஒரு சீசனில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்திய வீரருக்கான விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி வென்றுள்ளார், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 4 சதம் உட்பட 973 ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இந்த இன்னிங்ஸ் ஒரு தொடரில் ஒரு வீரர் உடைய அதிகபட்ச ரன் என்ற சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சீசனில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய வீரர் :
ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமான சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார் , அந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய நரைன் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினர் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவினார். அந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் ஒரு சீசனில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய வீரர் என்ற விருதை சுனில் நரைன் வென்றார்.
ஐபிஎல் தொடர் தனது 16 வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், வெற்றிகரமாக நடைபெற்ற 15 சீசன்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை விருது வழங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கௌரவித்துள்ளது. ஐபிஎல் 16 வது சீசனுக்கான முதல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.