ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இலங்கை; உலகக் கோப்பை தொடரில் நுழைந்து அசத்தல்... உற்சாகத்தில் ரசிகர்கள்...

உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணியை இலங்கை அணி வீழ்த்தியது.
உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி இலங்கையில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கும்பி 0 ரன், எர்வின் 14 ரன், மதாவாரே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து இணைந்த வில்லியம்ஸ், ராசா இணை அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இதில் வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார். இதையடுத்து வில்லியம்ஸ் 56 ரன்னிலும், ராசா 31 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட இலங்கை அணி, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியின் பதும் நிஷாங்கா சதம் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்தது. முன்னதாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ், உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.