விறுவிறுப்பான போட்டி...கடைசி வரை போராடிய டெல்லி...ஹைதெராபாத் மாஸ் வெற்றி!| DC vs SRH IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் அர்ஜுன் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஹைதெராபாத் அணி 197/6 ரன்கள் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து 198 ரன்கள் இலக்கை அடைய டெல்லி அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பில் சால்ட் இருவரும் களமிறங்கினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இரண்டாவது பந்தில் டேவிட் வார்னர் 0 ரன்னில் அவுட் ஆனார். போட்டியின் தொடக்கத்தில் கேப்டன் ஆட்டமிழந்தது டெல்லி அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. என்ன ஆனாலும் சரி பாத்துக்கலாம் என்று பில் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அணியின் வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தனர். ஹைதெராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்ட முடிவு செய்தனர். ஆகவே, இருவரும் சிக்ஸ், பௌண்டரி என்று மாறி மாறி அடிக்க பட்டைய கிளப்பினார்கள்.
இவர்களின் விறுவிறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 11வது ஓவரில் 112 ரன்கள் எடுத்தனர். ஆனால் மயங்க் மார்கண்டே ஓவரில் எதிர்பாராத விதமாக பில் சால்ட் (59) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மனிஷ் பாண்டே (1) வந்த வேகத்தில் அவுட் ஆகிவிட்டார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்ததால் டெல்லி அணியின் வேகம் குறைய ஆரம்பித்தது. பின்னர் மிட்செல் மார்ஷ் (63) 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் அணி முற்றிலுமாக துவண்டு போயினர்.
டெல்லி அணியின் வீரர்கள் பிரியம் கார்க் (12) மற்றும் சர்பராஸ் கான் (9) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக அக்சர் படேல் மற்றும் ரிபால் படேல் இருவரும் தான் சற்று தாக்கு பிடித்து விளையாட ஆரம்பித்தனர். இறுதி ஓவரில் டெல்லி அணி 1 பந்தில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. எனவே, வெற்றிக்கு மிக அருகில் டெல்லி அணியை கொண்டு வர அக்சர் படேல் (29) மற்றும் ரிபால் படேல் (11) அவுட் ஆகாமல் போராடினார்கள். போட்டியின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.