ஆசியக் கோப்பையில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பில்லை.. சோகத்தில் ரசிகர்கள்!

பெங்களூரு: இந்திய அணியின் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து கேஎல் ராகுலுக்கு மே மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர் நீண்ட வாரங்களாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், உடல் தகுதி பெறுவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கியில் பயிற்சியை தொடங்கினார். இதனால் இந்திய அணிக்கு விரைவாக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே ஆசியக் கோப்பைத் தொடருக்கு கேஎல் ராகுல் இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவார் என்று தகவல் வெளியாகியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டரில் அபாரமான ஃபார்மில் விளையாடி வந்த கேஎல் ராகுல், ஆசியக் கோப்பைக்கு திரும்பினால் உலகக்கோப்பைக்கு முன் சிறந்த பயிற்சியாக அமையும் என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்குள் கேஎல் ராகுல் முழு உடல்தகுதியை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆசியக் கோப்பைக்கும் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவரே தொடர்வார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கவுள்ள நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.