WPL 2023 : பெங்களூர் அணி தொடர்ந்து 5வது தோல்வி..!! சோகத்தில் ரசிகர்கள்..!! | rcb vs dc 2023 ipl

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் விளையாடினார்கள். இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அணியின் அனுபவ வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் காப்பானாக தொடர்ந்து செயல்பட்டு வரும் எல்லிஸ் பெர்ரி, இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 67*(52) ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் பதிவு செய்தது.டெல்லி அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துவக்க வீரர்கள் உடனுக்குடன் விக்கெட்டுகளை இழந்தனர், அதன்பின் களமிறங்கிய அணியின் வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாடிய நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 154 ரன்கள் பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் சிறப்பாக விளையாடிய ஆலிஸ் கேப்ஸி 38(24) ரன்கள் பதிவு செய்தார்.
இந்த போட்டியின் இறுதி நேரத்தில் டெல்லி அணி வெற்றிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனாசென் 29*(25) ஆட்டநாயகி விருதை வென்றார்.மேலும் இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து 5 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.பெங்களூர் அணியின் வெற்றியை காண காத்திருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தில் உள்ளார்கள்.