ரோஹித் சர்மாவிடம் இருப்பது சிறந்த கேப்டனுக்கான அடையாளங்கள் : புகழாரம் சூட்டும் ரஹானே

ரோஹித்தின் கீழ் விளையாடுவது சிறப்பானது என்றும், அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார் எனவும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள்,மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் பார்மை வைத்து அவர் டெஸ்ட் அணிக்குள் வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முறையே முதல் இன்னிங்ஸில் 89 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களை அவர் எடுத்திருந்தார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ரஹானே கூறும்போது, “நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், என்னில் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்தேன். எனது பேட்டிங்கில் நான் பணியாற்ற வேண்டிய சில குறைபாடுகள் இருந்தன. நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
சிஎஸ்கே நிர்வாகம் என்னிடம், 'உனக்கு சுதந்திரம் இருக்கிறது, அதன்படி விளையாடு' என்று கூறியது. நான் உண்மையில் ஒரு ஸ்ட்ரோக்-மேக்கர், நான் எப்போதும் ரன்கள் எடுக்கப் பார்ப்பவன். ரோல் மாறிவிட்டது, வேறு எதுவும் மாறவில்லை. அணி எனக்கு அளிக்கும் பங்கை நிறைவேற்றுவேன் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன்.
ரோஹித் எனக்கு அளிக்கும் ரோலை நான் நிறைவேற்றுவேன். ரோஹித்தின் கீழ் விளையாடுவது சிறப்பானது. அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார், பின்னர் அவர்களை ஆதரிக்கிறார். இவையெல்லாம் ஒரு சிறந்த கேப்டனின் அடையாளங்கள். சிறந்த உறவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நான் துணை கேப்டனாகப் பழகிவிட்டேன். ஏறக்குறைய ஐந்து வருடங்களாக கடுமையாக உழைத்தேன். ஆனால் மீண்டும் அணிக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். துணை கேப்டனாக திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.