இந்தியா vs நியூசிலாந்து : ரோஹித் மற்றும் கில் சதம் அடித்து அசத்தல்..! வலுவான நிலையில் இந்திய அணி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 16:11 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 3வது ஒருநாள் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது, இதில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் சதம் அடித்து அசத்தினார்கள்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் கில் நியூசிலாந்து அணியின் பவுலங்கை  சிதறடித்து, இந்தோரில் வான வேடிக்கை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் கடந்து இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்கள்.

அதன்பின் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள்  அடித்து ஆட்டமிழந்தார்.ரோஹித் சர்மா தொடர்ந்து பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்தாலும் சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்தார், இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தனது திறனை நிரூபித்தார். 

அதன்பின் மறுமுனையில் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர்  சுப்மன் கில் சர்வதேச அரங்கில் தனது 4வது சதம் அடித்து அசத்தினார், இந்த போட்டியில் 78 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 112 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் அடித்து குவித்த கில், தற்போது மேலும் ஒரு சதம் அடித்து தனது திறனை அனைவருக்கும் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.      

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மிகவும் அற்புதமான தொடக்கத்தை தங்கள் அணிக்கு வழங்கியுள்ளார்கள், ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிகபட்ச ஒபெனிங் ஸ்கோராக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அடித்த 204 ரன்கள் தான் முதல் இடத்தை பெற்றுள்ளது.   தற்போதைய நிலையில் இந்திய அணி 36 ஓவரில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.