இரானி கோப்பை 2022- 2023 : யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்து அசத்தல்..!! ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முன்னிலை..!!

இந்திய மண்ணில் நடைபெறும் உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் ஒன்றான இரானி கோப்பை தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான இரானி கோப்பை தொடர் அண்மையில் ஆரம்பித்த நிலையில், ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் குவாலியரில் விளையாடி வருகிறார்கள். இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மயங்க அகர்வால் மற்றும் மத்திய பிரதேஷ் அணிக்கு ஹிமான்ஷு மந்திரி ஆகியோர் கேப்டன்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக முதல் முறையாக விளையாடும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த பிறகு, இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.அதாவது ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு உதவும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 213 (259) மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 144(157) ரன்கள் பெற்றார்.
இதன் மூலம் ஒற்றை இரானி கோப்பை தொடரில் அதிக ரன்கள் பெற்றவர் என்ற சாதனையை படைத்தார், அதற்கு முன் இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான் 2012-2013 இரானி கோப்பை தொடரில் மொத்தமாக 332 ரன்கள் பெற்றது சாதனையாக பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 357 ரன்கள் பெற்று புதிய சாதனை படைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த 12 வது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.இந்த பட்டியலில் முதல் இந்தியராக 1929 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக விளையாடும்போது கே.எஸ்.துலிப் சின்ஜி இந்த சாதனையை படைத்து இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2022-2023 இரானி கோப்பை தொடரில் தற்போதைய நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி மத்திய பிரதேஷ் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் முடிவில் 437 ரன்கள் இலக்காக அளித்துள்ளது, மேலும் இந்த போட்டியின் 4வது நாளில் 3வது செசனில் 8 ரன்கள் பெற்று 1 விக்கெட்டை இழந்து மத்திய பிரதேஷ் அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.