IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா புதிய மைல்கல்லை அடைந்தார்.!! சர்வதேச அரங்கில் உச்சம் தொட்டார்…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடி வருகிறார்கள், இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரை முந்தி முக்கிய சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது, இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பேட்டிங் மற்றும் பௌலிங்கை என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா என்று கூறினால் மிகையில்லை.
அதேபோல் தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் தொடக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி வந்தார், கவாஜா 81(125) ரன்களில் விளையாட வந்த பொழுது ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங்கில் கே.எல். ராகுலிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கே.எல். ராகுல் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தி கவாஜா அடித்த பந்தை கேட்ச் பிடித்ததை பார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் உறைந்து போனார்கள், அந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 250 விக்கெட்டுகளை பதிவு செய்தார். இந்த போட்டியில் கவாஜா உடைய விக்கெட்டை பெற்றதன் மூலம் சர்வதேச அரங்கில் 250 விக்கெட்டுகள் மற்றும் 2500 ரன்களை வேகமாக பெற்ற 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 62 போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்து இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்கள் இம்ரான் கான் (64), கபில் தேவ் (65 ), ஹாட்லி (70 ), பொல்லாக் (71) மற்றும் அஷ்வின் (75 ) ஆகியோரை முந்தி 2வது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் , ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும் பெற்றுள்ளனர்.