பேர்ஸ்டோவிற்கு அடிப்படை கூட சரியாக தெரியவில்லை: விளாசி தள்ளிய அஸ்வின்!

மும்பை: ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக பேர்ஸ்டோவ் ரன் அவுட் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பத்திரிகைகளும் மாறி மாறி குற்றம்சாட்ட, விஷயம் அந்தந்த நாட்டின் பிரதமர்கள் வரை சென்றுவிட்டது. இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்தது. இதனால் ஆஷஸ் தொடர் பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பேர்ஸ்டோவ் - அலெக்ஸ் கேரி சர்ச்சை தொடர்பாக அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அந்த ஓவரின் கடைசி பந்தை பவுன்சர் வீசப்பட்ட போது பேர்ஸ்டோவ் குனிந்துவிட்டு பந்தை கூட பார்க்கவில்லை. இதனை முன்பாகவே அறிந்திருந்த அலெக்ஸ் கேரி சரியான நேரத்தில் சரியான த்ரோ மூலம் ரன் அவுட் செய்துள்ளார். நடுவர் ஓவர் முடிந்துவிட்டதாக அறிவிக்கவும் இல்லை, பேர்ஸ்டோவ் யாரிடமும் கேட்காமல் வெளியேறியதால் நிகழ்ந்த விளைவு தான் இது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்தாரா என்பதை கூட பேர்ஸ்டோவ் பார்க்கவில்லை.
சென்னையில் உள்ள யு10, யு12 மற்றும் யு14 போட்டிகளில் இதுபோன்ற ரன் அவுட்கள் நடப்பது சாதாரணம். ஒரு பேட்ஸ்மேனின் அடிப்படையே க்ரீஸை பாதுகாத்துக் கொள்வது. எனது பள்ளி நாட்களில் பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் அந்த விதியைப் பற்றி பேசாமல், கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட ஏராளமான ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்று பேசுகிறார்கள். 20 மீட்டர் தூரத்தில் இருந்து ரன் அவுட் செய்த அலெக்ஸ் கேரியை அனைவரும் பாராட்ட வேண்டும்.
ஆனால் கேப்டன் கம்மின்ஸ் பேட்ஸ்மேனை மீண்டும் அழைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். க்ரீஸை பாதுகாத்துக் கொள் என்று பயிற்சியாளர்கள் பேர்ஸ்டோவிற்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல் நடுவரின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வீரர்களை சொல்லிவிட்டு, பேர்ஸ்டோவிற்கு அவுட் கொடுத்த நடுவரின் முடிவை மட்டும் எதற்காக விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்பதி விதிமுறைகளின் படி விளையாடுவதே என்று தெரிவித்துள்ளார்.