ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி.. மீண்டும் படுதோல்வியில் டெல்லி.. | IPL 2023 Delhi Capitals Rajasthan Royals Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹ்மத் வீச, 5 பவுண்டரிகளை விளாசி ஜெய்ஸ்வால் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார்.
பின்னர், பொறுப்புடன் விளையாடி ஜெய்ஸ்வால் 60(31) ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை தெறிவிக்கவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 0(4) சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொதப்பியதால் அணியின் ஸ்கோர் குறையத் தொடங்கியது. பின்னர் பட்லர் 79(51) மற்றும் ஹெட்மையர் 39(21) இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 199/4 ரன்கள் குவித்தது.
அதன்பின் பேட்டிங் செய்ய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கினர். ராஜஸ்தான் அணி தரப்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான போல்ட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிரித்வி ஷா 0(3) ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அடுத்த பந்தில் மனீஷ் பாண்டேவும் 0(1) ஆட்டமிழந்து வெளியேற, டெல்லி அணி ரன் ஏதும் எடுக்காமலேயே 2 முக்கிய விக்கெட்டுகளை கோட்டைவிட்டது. இது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிரடியாக விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் 65 (55), லலித் யாதவ் 38 (24), ரிலே ரூசோவ் 14 (12) ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களைதான் சேர்த்தார்கள். இறுதியாக, 20 ஓவர்களில் 142/9 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி கேபிடல்ஸ் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், இப்போட்டியில் 65 ரன்களை குவித்ததன் மூலம் வார்னர் 165 ஐபிஎல் இன்னிங்ஸ்களில், அதாவது அதிவிரைவாக 6000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஷிகர் தவன் தவன், விராட் கோலி ஆகியோரும் 6000 ரன்களை அடித்த வீரர்களாக இருக்கிறார்கள்.