ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்!! ரெய்னா கருத்து..!! | raina about gaikwad as captain

இந்திய மண்ணில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து அணிகளும் இந்த தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொடரில் முக்கிய அணியாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளங்கும் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள், மேலும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிதாக சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
ஜியோ சினிமா தளத்தில் ரெய்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், சென்னை அணியின் அடுத்த கேப்டனாக தோனி ஓய்விற்கு பிறகு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.சென்னை அணியில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான பேட்டிங் மூலம் தற்போது அணியின் முன்னணி துவக்க வீரராக முன்னேறி உள்ளார்.
இது குறித்து பேசிய ரெய்னா கூறியது, ருதுராஜ் கெய்க்வாட் தோனி அணியில் இடம் பெற்றிருக்கும் போது அவரிடம் இருந்து அனைத்து அனுபவங்களையும் கற்று கொள்ள வேண்டும். அதன்பின் இந்திய அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 635 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் 2022 ஆம் ஆண்டு சென்னை அணி மோசமான தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த 2023 ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முழுவீச்சில் செயல்படும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.