ஹஜ் பயணம் மேற்கொண்ட பாபர் அசாம்.. மக்களோடு தரையில் உறங்கிய காட்சியால் ரசிகர்கள் ஆச்சரியம்!!

மெக்கா: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் புனித ஹஜ் பயணத்தின் போது மக்களோடு மக்களாக தரையில் படுத்து உறங்கிய காட்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தற்போது மெக்காவில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான் அணி தற்போது எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஜூலை 16ஆம் தேதி தான் இனி அவர்கள் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார்கள். இதனால் தற்போது அவர்கள் ஓய்வு நேரத்தில் இருக்கிறார்கள்.
இந்த ஓய்வை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் துணை கேப்டன் முகமது ரிஸ்வான் ஆகியோர் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள்.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் கடைசி கடமை ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது ஆகும். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இந்த புனித பயணத்தை சாதாரண மக்களோடு மக்களாக மேற்கொள்வார்கள்.
இந்தியாவின் நட்சத்திர வீரர்களான யூசுப் பதான், இர்பான் பதான் ஏற்கனவே ஹஜ் பயணத்தை கடந்த காலங்களில் மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். இதில் ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக பக்ரீத் பண்டிகைக்கு முன்பு பாலைவனத்தில் டென்ட் கொட்டாயில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.
இதில் பலதரப்பட்ட மக்களும் அந்த டென்டில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தரையில் மக்களோடு மக்களாக படுத்து உறங்கிய காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்தவுடன் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மெக்காவில் உள்ள தரையை துப்புறவு பணியாளர்களுடன் முகமது ரிஸ்வான் சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்த காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.