ஐபிஎல் 2023 : வில்லியம்சன், சவுதீ விரைவில் ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்பார்கள் ..!! நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னதாக குறிப்பிட்ட அணிகளின் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் முன்னணி நியூசிலாந்து வீரர்கள் இலங்கை தொடரில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடர் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில்,அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நியூசிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு முன்னணி வீரர்கள் கேன் வில்லியம்சன், டிம் சவுதீ, டேவன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர் உள்ளிட்டோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி பங்கேற்க உள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக வில்லியம்சனுக்கு பதில் டாம் லாதம் செயல்படுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.மேலும் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள மற்ற மூன்று நியூசிலாந்து வீரர்கள் மார்ச் 25 ஆம் தேதிக்கு மேல் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க உள்ள முன்னணி நியூசிலாந்து வீரர்கள் :
1) கேன் வில்லியம்சன் - குஜராத் டைட்டன்ஸ்
2) டிம் சவுதீ - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
3) டேவன் கான்வே - சென்னை சூப்பர் கிங்ஸ்
4) மிட்செல் சான்ட்னர்- சென்னை சூப்பர் கிங்ஸ்
5) பின் ஆலன்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
6) லாக்கி பெர்குசன்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
7) க்ளென் பிலிப்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்த 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வரும் மார்ச் 31 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.