ட்விஸ்ட்.. உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெற்ற நெதர்லாந்து.. ஸ்காட்லாந்துக்கு மரண அடி!

புல்வாயோ: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுக்கு இலங்கை ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், 2வது அணியாக நெதர்லாந்து முன்னேறியுள்ளது.
புல்வாயோவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் மோதிய முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் மேத்தீவ் டக் அவுட்டாக, கிறிஸ்டோபர் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜார்ஜ் முன்சி 9 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய பிராண்டன் மெக்முல்லன் சதம் விளாசினார்.
கேப்டன் ரிச்சி பெரிங்டன் அவருக்கு துணையாக நின்று 64 ரன்கள் சேர்க்க, இறுதியில் தோமஸ் 38 ரன்கள் அடித்தார். இதனால் ஸ்காட்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 277 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 40 ரன்களும், மேக்ஸ் 20 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். வீஸ்லி 11 ரன்களில் வெளியேற, நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் பெஸ் டீ லீட் 92 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சரும், 7 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் அவர் முக்கிய கட்டத்தில் ரன் அவுட்டாக, ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் சாகிப் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 42.5வது ஓவரில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் உலககோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. ஜிம்பாப்வே அணியை ஸ்காட்லாந்து அணி வீழ்த்திய நிலையில், ஸ்காட்லாந்து அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தி உலகக்கோப்பை சுற்றுக்கு முன்னேறியுள்ளது.