IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் உலக சாதனைக்கு வாய்ப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது, இந்த போட்டியில் புதிய உலக சாதனை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளையும் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றியையும் பதிவு செய்துள்ள நிலையில், இறுதியாக நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டி தொடரின் முடிவை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 3-1 என்ற வீதத்தில் கைப்பற்றி விடும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்ற விதத்தில் சமன் செய்து விடும்.
இந்நிலையில் இந்த போட்டியை காண இரு அணிகளின் ரசிகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். இந்த 4வது டெஸ்ட் போட்டி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பு பெற்ற அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரங்கத்தில் 1,32,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கைகள் அமைக்க பட்டிருக்கிறது, எனவே 4வது டெஸ்ட் போட்டியை காண நரேந்திர மோடி மைதானத்தில் 1,10,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சிறப்பு மிக்க போட்டியை காண இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இருவரும் மைதானத்தில் பங்கேற்க உள்ளார்கள் என்பதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி மைதானத்தில் பல இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தோராயமாக 1,10,000 பார்வையாளர்கள் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாபெரும் நிகழ்வு உலக சாதனையாக பதிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 2013-2014 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை காண 91,112 பார்வையாளர்கள் இடம்பெற்றது தான் ஒரு டெஸ்ட் போட்டியை காண அதிக பார்வையாளர்கள் இடம்பெற்ற உலக சாதனையாக பதிவான நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த உலக சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.